தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி வருகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி வருகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2017 11:00 PM (Updated: 12 Aug 2017 9:09 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி,

பள்ளிக்கூடங்களில் தகுதி நிறைந்த படிப்பு கொடுக்கப்படாத காரணத்தினால் தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ‘நீட்’ தேர்வு கட்டாயம் தேவை. அதேநேரத்தில் தமிழக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் நிரந்தர விலக்கு என்பது தமிழக மாணவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய தீங்கு. ஓராண்டு அவகாசம் கொடுத்தால் சரியாகி விடும். காரணம், தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சி எடுத்து வருகிறார். இது வரவேற்கத்தக்கது. ஓராண்டு விலக்கு கொடுத்தால் தவறில்லை என்பது பொதுப்படையான கருத்து. இந்த பிரச்சினை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் நல்ல முடிவு வரும்.

அ.தி.மு.க. பலகூறுகளாக பிரிந்துள்ளது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் இணைந்தால் கட்சிக்கு நல்லது. ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு ஆட்சியை பாதிக்கக்கூடாது என்பது அனைவரின் கருத்து. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து காரணமின்றி வெளியேறினார். அன்று முதல் சில அரசியல் காரணங்களுக்காக பா.ஜனதாவை விமர்சித்து வருகிறார். பா.ஜ.க.வின் வளர்ச்சியை தமிழகத்தில் எந்த கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி வருகிறது.

சிவாஜி சிலையை அகற்றி இருக்கக்கூடாது என்பது எனது கருத்து. இதற்காக சட்டசபையை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்துக்கு ஒப்புதல் கடிதம் வந்துள்ளது. அதேபோல சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை வழியாக ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கும் தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சியின் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டம் சத்திரம் பஸ் நிலைய பகுதியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.


Next Story