“கரூர் பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும்” அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


“கரூர் பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும்” அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

“கரூர் பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும்” என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூரில் திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் சிவாஜி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆய்வு குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையும், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையும் கரூரில் சந்திக்கும் இடமாக திருக்காம்புலியூர் ரவுண்டானா உள்ளது. ரவுண்டானாவில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. சாலை இரு புறமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ரவுண்டானாவின் அளவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாலையில் இரு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈரோடு பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கரூர் பஸ் நிலையம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்திடம் தற்போது போதுமான நிதி இல்லை. அதனால் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. கரூர் பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story