மசினகுடியில் போலீஸ்காரர் மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
மசினகுடியில் போலீஸ்காரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கோபால் (வயது 29). இவர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் இருந்து மதிய உணவு சாப்பிட மசினகுடி பஜாருக்கு சென்றார். அப்போது பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.
இதை பார்த்த போலீஸ்காரர் கோபால் போக்குவரத்தை சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த இடத்தில் 2 கார்கள் இருந்தன. அந்த கார்கள்தான் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது தெரிந்தது.
இதை பார்த்த போலீஸ்காரர் கோபால் அந்த கார்கள் அருகே சென்றார். அதில் ஒரு காரில் ஆட்கள் இல்லை. மற்றொரு காரில் 7 பேர் இருந்தனர். அவர்களிடம் ‘போக்குவரத்துக்கு இடையூறாக ஏன் காரை நிறுத்தி உள்ளீர்கள்’ என்று கேட்டார். அப்போது காரில் இருந்து 2 பேர் கீழே இறங்கி கோபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் கோபாலை சரமாரியாக தாக்கினார்கள். இதை பார்த்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அந்த 2 பேரிடம் இருந்து போலீஸ்காரர் கோபாலை மீட்டு சிகிச்சைக்காக மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொதுமக்கள் அந்த 2 பேரையும் மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரிடமும் விசாரித்தார். விசாரணையில் அவர்கள் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த எஸ்.பிரவீன் (21), மற்றொருவர் மாதவரம் பகுதியை சேர்ந்த ஜி.பிரவீன் (20) என்பதும், 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், அவர்கள் சக நண்பர்களுடன் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.