தாராவியில் புல்லட் ரெயில் முனையம் சட்டசபையில் மந்திரி தகவல்


தாராவியில் புல்லட் ரெயில் முனையம் சட்டசபையில் மந்திரி தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:00 AM IST (Updated: 13 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் புல்லட் ரெயில் முனையம் அமைக்கப்படுவது குறித்து பரிசீலித்து வருவதாக சட்டசபையில் போக்குவரத்து துறை தெரிவித்தார்.

மும்பை,

தாராவியில் புல்லட் ரெயில் முனையம் அமைக்கப்படுவது குறித்து பரிசீலித்து வருவதாக சட்டசபையில் போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செல்லத்திட்டங்களில் ஒன்று மும்பை– ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்காக புல்லட் ரெயில் முனையம் அமைக்க பாந்திரா– குர்லா காம்ப்ளக்சில் மத்திய அரசு இடம் கேட்டு இருந்தது. மாநில அரசும் புல்லட் ரெயில் முனையம் அமைக்க பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இதை மறுத்து சட்டசபையில் மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:–

புல்லட் ரெயில் முனையம் அமைக்க பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் இடம் ஒதுக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. தாராவியில் புல்லட் ரெயில் முனையம் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

மேலும் நிலம் கையகப்படுத்தலை குறைக்கும் வகையில் மும்பை– தானே இடையே பாதாள புல்லட் ரெயில் பாதையை அமைப்பது குறித்தும் யோசித்து வருகிறோம். புல்லட் ரெயில் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு தொகை வழங்கப்படும். புல்லட் ரெயில் திட்டத்திற்கு தேவையான நிதியை 80 சதவீதம் ஜப்பான் நிறுவனம் கடனாகவும், 10 சதவீதத்தை மத்திய அரசும் வழங்கும். மீதமுள்ள 10 சதவீத நிதியை மட்டும் குஜராத், மராட்டிய அரசு வழங்கினால் போதும். எனவே இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு பெரியளவு நிதிச்சுமை ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story