புதிய பாடத்திட்டம் மாணவர்களின் அடிப்படை அறிவை மேம்படுத்தும்: பாடதிட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேட்டி


புதிய பாடத்திட்டம் மாணவர்களின் அடிப்படை அறிவை மேம்படுத்தும்: பாடதிட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2017 5:45 AM IST (Updated: 13 Aug 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

புதியதாக மாற்றி அமைக்கப்பட உள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அடிப்படை அறிவை மேம்படுத்தும் என்று கோவையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பாட திட்ட குழுவின் தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறினார்.

சரவணம்பட்டி,

பள்ளி கல்வி துறை சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்யும் பாடமுறையை மாற்ற வேண்டும், எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டும், சவால்களை மாணவர்கள் சந்திக்கும் வகையிலும் புதிய பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் கூறினர்.

இதனை தொடர்ந்துபாடதிட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தற்போதைய மாநில பாடத்திட்டம் 12 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட போதும், தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட வில்லை. இதனால் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் தமிழக மாணவர்கள் திணறி வருகின்றனர். தற்போது மாற்றம் செய்யப்படவுள்ள புதிய பாடத்திட்டம் அடிப்படை அறிவை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தை கையாளவும், தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் அமையும். இதற்காக 3 முக்கிய அம்சங்களை தயாரித்துள்ளோம்.

இதில் பழைய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டு சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பாடத்திட்டம் மற்றும் பின்லாந்து, ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளோம். மேலும் ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை இணைத்து புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.1–ம் வகுப்பு முதல் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதால், குழந்தைகளின் வயது மற்றும் கற்கும் திறனுக்கேற்ப பல புதிய முறைகளில் பாடங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் கற்றல் திறனில் எவ்வித சிக்கலும் இருக்காது.

மேல்நிலை வகுப்புகளில் பாடப்பிரிவிற்கேற்ப புதிய பாடங்கள் இணைக்கப்படும். தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்பவர்கள், துறை சார்ந்த அறிவியல் பாடத்தையும் படிக்கலாம். மேலும் அறிவியல் பாடத்திட்டத்தில் ரோபோடிக், கணிணி தொழில்நுட்பம் குறித்த பாடங்கள் இடம்பெறும். சமூக அறிவியல் பாடத்தில் உள்ளூர் வரலாறு, தொன்மையான இடங்கள், நிலப்பரப்பு சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயர் கல்வியை தேர்வு செய்தாலும், அந்த துறை சார்ந்த அடிப்படை அறிவு பள்ளிகளில் பெறும் அளவிற்கு பாடங்கள் இடம்பெறும். பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது என்பது வரவேற்கத்தக்கது. இதை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story