செம்மஞ்சேரியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


செம்மஞ்சேரியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 13 Aug 2017 5:45 AM IST (Updated: 13 Aug 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூர் அருகே பந்தை எடுக்கச்சென்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அரசு ஆஸ்பத்திரியை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமார். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் (10) என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் இருந்தனர். கார்த்திக் அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே பூங்கா உள்ளது. நேற்று மாலை சிறுவன் கார்த்திக், இங்கு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது பந்து ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே விழுந்தது.

மின்சாரம் தாக்கி பலி

பந்தை எடுப்பதற்காக கார்த்திக் சுற்றுச்சுவரை தாண்டி குதிக்க முயன்றான். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர்ஓரம் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே இருந்த மின்கம்பி சிறுவன் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதால் கார்த்திக் தூக்கி எறியப்பட்டான்.

கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் யாரும் இல்லை. செவிலியர் மட்டும் இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

போன் செய்தும் குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்சும் வரவில்லை. பின்னர் ஆட்டோ மூலம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்து போனான்.

ஆஸ்பத்திரி சூறை

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்தனர். அங்கிருந்த இரும்பு நாற்காலிகளை எடுத்து வீசி எறிந்தனர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பிரபாகர் என்ற போலீஸ்காரரை தாக்கி உள்ளே புகுந்த மக்கள், அங்கு இருந்த மருந்துகளை தூக்கி வீசினர். பின்னர் கண்ணாடி ஜன்னல்களையும், அறிவிப்பு பலகையையும் உடைத்து ஆஸ்பத்திரியை சூறையாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மருத்துவமனை எதிரில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது காலதாமதமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் தாக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆம்புலன்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே திடீரென மழை பெய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.



Next Story