சட்டசபை தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்போம் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி அழைப்பு


சட்டசபை தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்போம் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி அழைப்பு
x
தினத்தந்தி 13 Aug 2017 3:59 AM IST (Updated: 13 Aug 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திர மோடி அரசு நிறைவேற்றாத மற்றும் தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று ராய்ச்சூர் மாநாட்டில் ராகுல்காந்தி கடுமையாக தாக்கினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநாடு ராய்ச்சூரில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், ராகுல் காந்தி பேசியதாவது:–

இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏனென்றால் விவசாயிகள் தான் நாட்டை வளமாக்குவார்கள் என்பதை நாங்கள் அறிந்து உள்ளோம். விவசாயிகள் வளமானால் நாடு வளமாகும். விவசாயிகள் வாடினால் நாடும் வாடிவிடும்.

பொதுமக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் போராடுகிறது. மத்திய உள்துறை மந்திரியாக பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இருந்தபோது அரசியலமைப்பின் 371 (ஜே) பிரிவு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2004–ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு வந்தவுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் இன்றும் அதிகளவில் பயன்பெற்று வருகிறார்கள்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை சோம்பேறி ஆக்கும் செயலை செய்ய மாட்டேன் என மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். இந்தியாவில் 10 பெரிய தொழில்அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தால் அவர்கள் சோம்பேறி ஆகமாட்டார்களா?. ஆனால், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டும் விவசாயிகள் சோம்பேறிகளாக மாறிவிடுவார்களோ?. இது என்ன நியாயம்?. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு உதவுவோம் என மோடி அரசு கூறியது. ஆனால் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஆண்டுதோறும் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 15 சதவீதமாக அதிகரித்து வந்தது. ஆனால், தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் விவசாய விளைப்பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆண்டுக்கு 2 முதல் 3 சதவீதமாக உயர்ந்து வருகிறது. விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் கர்நாடக அரசு ஒருங்கிணைந்த விற்பனை கூடங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார். நாங்கள் விவசாயிகளுக்கு உதவியாக நிற்கிறோம். ஆனால், பா.ஜனதா விவசாயிகளுக்காக நிறைவேற்றாத மற்றும் தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘மேக்–இன் இந்தியா‘ திட்டத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால், இதுவரை ஒரு தொழிற்சாலையும் புதிதாக திறக்கப்படவில்லை. ‘மேக்–இன் இந்தியா‘ திட்டத்தால் இங்கு யார் வேலை வாய்ப்பு பெற்றார்கள். ஆனால், சித்தராமையா அரசில் கர்நாடகத்தில் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

மத்திய அரசு தவறான வாக்குறுதிகளை அளித்தாலும் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முதல்–மந்திரி சித்தராமையா பொதுமக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து செயல்பட்டு வருகிறார். அவர் தவறான வாக்குறுதிகளை அளிப்பது இல்லை. இதுதான் எங்களுக்கும் (காங்கிரஸ்), அவர்களுக்கும் (பா.ஜனதா) உள்ள வித்தியாசம். தங்களுக்கு காங்கிரஸ் அரசு தான் உதவி செய்யும் என விவசாயிகள் அறிந்துகொண்டனர். அதேப் போல் நரேந்திர மோடி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது இல்லை என்பதை இளைஞர்களும் புரிந்துகொண்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அன்றைய தினம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நரேந்திர மோடி சம்மட்டியால் அடி கொடுத்தார். திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய நரேந்திர மோடி ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யப்போவதாக அறிவித்தார். அது வேடிக்கையாக இருந்தது. உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் சிறிய விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

கர்நாடகத்தில் தற்போதைய காங்கிரஸ் அரசின் சாதனைகள் அடுத்த ஆண்டு (2018) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தரும். விவசாயிகள், இளைஞர்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொண்டர்கள் தான் கட்சியின் பலம் என்பதை சொல்ல விரும்புகிறேன். தொண்டர்கள், தலைவர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் பலத்தை நிரூபிக்கும் வகையில் கர்நாடக சட்டசபை தேர்தலை சந்திப்போம்.

ஆதிதிராவிடர், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். தற்போதைய ஆட்சியில் மக்களுக்காக நாம் செய்த வளர்ச்சி பணிகளைவிட அடுத்த 5 ஆண்டுகளில் நாம் அதிகமாக செய்ய வேண்டும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.


Next Story