போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனை: 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு
சேலம், தர்மபுரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி 3 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும், விதிமுறை மீறிய 185 பஸ்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்,
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. அதையொட்டி, நகர்ப்புறங்களில் வேலைநிமித்தமாக குடும்பத்துடன் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவர ரெயில்களில் டிக்கெட் இன்றி, ஆம்னி பஸ்களை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் நிறுவனங்கள் வழக்கத்தைவிட கட்டணத்தை இருமடங்காக்கி விட்டது. அதை தடுக்கும் வகையில் அரசு அனைத்து ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்தவர்களிடம் வசூலித்த கட்டணம் எவ்வளவு? என்றும், பயணத்தின்போது பஸ்களில் அவர்கள் வைத்துள்ள டிக்கெட் கட்டணம் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, சேலம் மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் பொன்.செந்தில்நாதன் தலைமையில் சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்திலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சேலம் அடுத்த மேட்டுப்பட்டி, சங்ககிரி மற்றும் தொப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், சேலம் புதிய பஸ் நிலையத்திலும் ஆம்னி பஸ்களை நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மதியம்வரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
3 ஆம்னி பஸ்கள் பறிமுதல்அப்போது மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த 2 ஆம்னி பஸ்கள் சாலைவரி கட்டாமல் இயங்கியது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு ஆம்னி பஸ்சில் நிர்ணயித்ததைவிட கூடுதல் சரக்குகள் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது,
மேலும் விதிமுறை மீறல், ஏர்ஹாரன் பொருத்தியது, அவசர வழிக்கதவு இல்லாதது என பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு 185 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையின்போது பயணிகளிடம் நிர்ணயித்ததைவிட, கூடுதல் கட்டணம் வசூலித்த தொகையை கண்டக்டர்கள் திரும்ப கொடுத்தனர். இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து 15–ந் தேதிவரை இந்த சோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.