வீடு புகுந்து தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற முகமூடி கும்பலுக்கு தர்ம அடி 5 பேர் கைது
பல்லடத்தில் வீடு புகுந்து தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற முகமூடி கும்பலை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் திருமலை நகரில் வசித்து வருபவர் வெங்கட்ராமன் (வயது 43). பனியன் நிறுவன மேலாளர். இவருடைய மனைவி லட்சுமி(35).
நேற்று காலை இவர்களது வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 9 பேர் லட்சுமியை கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தை பிடித்து நெரித்து பணம் கேட்டு மிரட்டினர். மேலும் வெங்கட்ராமனின் முகத்தை போர்வையால் மூடி, அவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது வெங்கட்ராமனும், லட்சுமியும் சத்தம் போட அருகே வசிக்கும் பொதுமக்கள் ஓடிவந்துள்ளனர். இதைப்பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடினார்கள்.
அவர்களில் 2 பேர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார்கள். அவர்களை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தப்பி ஓடிய ஆசாமியில் ஒருவன் அங்கு திரண்டு இருந்த கூட்டத்துக்குள், எதுவும் தெரியாதவர் போல் சாதாரணமாக நின்று அங்கு என்ன நடக்கிறது என்று கவனித்து கொண்டிருந்துள்ளான். பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய கொள்ளையர்கள், அந்த நபரை அடையாளம் காண்பித்து ‘அவரும் எங்களுடன் வந்தவர் தான்’ என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து மக்களோடு, மக்களாக நின்று வேடிக்கை பார்த்த அந்த ஆசாமியையும் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து பின்பக்கம் வழியாக தப்பி ஓடிய கொள்ளையர்கள் 2 பேரையும், பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து பிடிபட்ட 5 பேரையும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் அருண்குமார்(33), வெள்ளகோவில் கார்த்திகேயன்(33), அரியலூர் ராஜ்குமார்(20), கோவை பவித்திரன்(22), தஞ்சாவூர் ஸ்டீபன்(30) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து அதே பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக, வெங்கட்ராமன் வீட்டில் கொள்ளை அடிக்க இவர்கள் நோட்டமிட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் மொத்தம் 9 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.