பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலம் உரம் விற்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலம் உரம் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ப.வாசுதேவரெட்டி முன்னிலை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் சுப்புலட்சுமி வரவேற்றார். விழாவில் கலெக்டர் ராமன், முதல் கட்டமாக 10 வேளாண்மை சங்கங்களுக்கு உரம் விற்பனை செய்ய பாயிண்ட் ஆப் சேல் கருவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் விற்பனையை முறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் விவசாயிகளுக்கு உரம் விற்கப்பட உள்ளது.பாயிண்ட் ஆப் சேல் கருவி பயன்படுத்துவது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இக்கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய முதல்கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கிரிப்கோ நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் விற்பனையாளர்களுக்கு விரைவில் பாயிண்ட் ஆப் சேல் கருவி வழங்க பாக்ட் நிறுவனத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இனி வரும் நாட்களில் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம்தான் உரத்தை விற்பனை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரத்தை பெறும் விவசாயி தனது ஆதார் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்.
மேலும் உரத்தை வாங்கும் விவசாயி தனது கைவிரல் ரேகையை பாயிண்ட் ஆப் சேல் கருவியில் பதிவு செய்தபின் தான் உரம் வாங்க முடியும். இதன் மூலம் விவசாயப்பணிகள் அல்லாத வேறு பயன்பாட்டிற்கு உரத்தை பயன்படுத்துவதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள உரத்தின் இருப்பு மற்றும் சேவை உள்ளிட்ட விவரங்களை விவசாயிகள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.