புதிய அத்திக்கடவு நீர் ஆதார திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும், அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


புதிய அத்திக்கடவு நீர் ஆதார திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும், அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2017 6:45 AM IST (Updated: 14 Aug 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

புதிய அத்திக்கடவு நீர் ஆதார திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பெருந்துறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பெருந்துறை,

பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். முகாமில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், சிவசுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்று அவைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-

பெருந்துறை தொகுதியின் பெரும்பகுதி ஊராட்சி பகுதிகளாகும். நீர் ஆதாரமின்றி தவிக்கும் இப்பகுதிக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அந்த உறுதிமொழிப்படி, புதிய அத்திக்கடவு திட்டம் தீட்டப்பட்டு அதை செயல்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.250 கோடியை முதல் தவணையாக ஒதுக்கீடு செய்துள்ளார். மொத்தம் ரூ.1,500 கோடியில் நிறைவேற்றப்பட உள்ள இந்த புதிய அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

பெருந்துறை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ரூ.90 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதியின் மற்றொரு கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசின் ஆய்வில் இருந்து வருகிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க 5 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதில் எந்த இடம் தகுதியானது? என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.

பெருந்துறையில் குடிநீர் தேவைக்கான கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் விரைந்து பரிசீலனை செய்து அதற்கான நடவடிக்கையை எடுப்பார். வீட்டுமனை பட்டா கேட்பவருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைன் கூறினார்.

Next Story