ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதியது டிரைவர் சாவு
பெருந்துறை அருகே ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். உதவியாளர் படுகாயம் அடைந்தார்.
பெருந்துறை,
கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து ஒரு சினிமா ஷூட்டிங் வேன் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இந்த வேனை ஆலப்புழாவை சேர்ந்த சுமேஷ் (வயது 30) ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த உன்னி (32) உதவியாளராக இருந்தார்.
இந்த வேன் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. இதனால் சுமேசும், உன்னியும் வேனில் இருந்து கீழே இறங்கி வேனை பழுது பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ரோட்டோரமாக பழுதாகி நின்ற வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மேசும், உன்னியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் டிரைவர் சுமேஷ் உடல்நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உன்னி படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த உன்னி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.