விழுப்புரம் அருகே அரசு அதிகாரியின் ஜீப்பில் மதுபாட்டில்கள் கடத்தல், 3 பேர் கைது


விழுப்புரம் அருகே அரசு அதிகாரியின் ஜீப்பில் மதுபாட்டில்கள் கடத்தல், 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அரசு அதிகாரியின் ஜீப்பில் மதுபாட்டில்கள் கடத்தியதாக அவரது பேரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைசாவடியில் சப்–இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு ஜீப்பை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த ஜீப்பில், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய 54 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜீப்பில் வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரியூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி(19), பெரியசாமி மகன் கலைச்செல்வன்(18), மூக்கன் மகன் கிருஷ்ணமூர்த்தி(20) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து அரசு ஜீப்பில் மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

மதுபாட்டில்கள் கடத்துவதற்கு அரசு ஜீப் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளகுறிச்சி வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றுபவர் கோவிந்தன். இவருக்கு வேளாண்மைத்துறையின் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய பேரனான ப.கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர்களுடன் ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், அதை கடத்த பயன்படுத்தப்பட்ட ஜீப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளகுறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தனுக்கு அரசு வழங்கிய ஜீப்பில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது வளவனுரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(33) என்பவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட தயாரானார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குமணன், கிருஷ்ணமூர்த்தியை தாக்கினார். அவரிடம் இருந்து தப்பி ஓடியபோது கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்தார். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் குமணன், காகுப்பம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


Next Story