சேலத்தில் பலத்த மழை அதிகபட்சமாக கெங்கவல்லியில் 54.2 மி.மீட்டர் பதிவு
சேலத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கெங்கவல்லியில் 54.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்காக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வெயிலின் தாக்கமும் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சேலத்திலும் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் சேலம் மாநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் லேசான மழை பெய்தது. அதிகாலை வேளையில் இது பலத்த மழையாக மாறி சிறிது நேரம் கொட்டித் தீர்த்தது. பின்னர் இந்த மழை தூரலாக மாறி தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இதுதவிர பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனர். மழையில் நனையாமல் இருக்க வாகன ஓட்டிகள் சிலர் பின்னால் அமர்ந்திருந்தவர்களின் உதவியுடன் குடைபிடித்து செல்வதை பார்க்க முடிந்தது. சேலம் மாநகரில் நேற்று வெயிலின் முகம் நிலத்தின் மீது படாததால் வெயிலின் தாக்கத்தை அனுபவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 54.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு நேற்று காலை நிலவரப்படி மில்லி மீட்டரில் வருமாறு:–
வீரகனூர்–39, தம்மம்பட்டி–38.2, காடையாம்பட்டி–20, ஓமலூர்–19.4, ஆணைமடுவு–17, ஆத்தூர்–15.6, ஏற்காடு–15.4, பெத்தநாயக்கன்பாளையம்–14.4, கரியகோவில்–12, வாழப்பாடி–8, சேலம்–7, மேட்டூர்–5.8, எடப்பாடி–4, சங்ககிரி–2.