திருவேற்காட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அடித்து நொறுக்குவோம் என ஆவேசம்
திருவேற்காட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடிய விரைவில் கடையை மூடாவிட்டால் அதனை அடித்து நொறுக்குவோம் என அவர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி,
திருவேற்காட்டில் கோலடி அயனம்பாக்கம் செல்லும் சாலையின் ஓரம் நேற்று முன்தினம் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை குடியிருப்புகள் மத்தியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியபடி சாலையில் ஊர்வலமாக சென்றனர்.
பின்பு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருவேற்காடு போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினார்கள்.
இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் டாஸ்மாக் கடை மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளிடம் பேசி டாஸ்மாக் கடை அகற்றப்படும் என பொதுமக்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
இந்த பகுதியில் பள்ளிகள் மற்றும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான் பெண்கள் தினமும் வேலைக்கும், மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்கின்றனர். டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இதனால் பெண்கள் அந்த சாலையில் செல்ல அஞ்சுகின்றனர். எங்கள் பகுதியில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை, மினி பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறி வருகிறோம்.
ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்காமல் தேவை இல்லாமல் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கூடிய விரைவில் டாஸ்மாக் கடை மூடப்படவில்லை என்றால் அந்த கடையை நாங்களே அடித்து நொறுக்கி அகற்றுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.