செங்குன்றம் அருகே தடுப்பு சுவரில் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு
செங்குன்றம் அருகே டேங்கர் லாரி தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
செங்குன்றம்,
சென்னை திருவொற்றியூரிலிருந்து சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று கும்மிடிப்பூண்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. லாரியில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் இருந்ததாக தெரிகிறது.
இந்த டேங்கர் லாரி செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சிக்னல் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடியது. பின்னர் சாலையின் வலதுபக்கம் இருந்த தடுப்பு சுவரில் பலமாக மோதி நின்றது.
இதில் லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே நிலைய அதிகாரி லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீ மேலும் பரவாமல் முழுவதுமாக அணைத்தனர். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அந்த லாரியை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். டேங்கர் லாரியில் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.