வேளாண்துறையில் சோதனை அடிப்படையில் சூரிய மின்சக்தி திட்டம்


வேளாண்துறையில் சோதனை அடிப்படையில் சூரிய மின்சக்தி திட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2017 3:41 AM IST (Updated: 14 Aug 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் துறையில் சோதனை அடிப்படையில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளார்.

ஜல்னா,

ஜல்னாவில் ரூ.124 கோடி செலவில் 19 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, ஜல்னா மாவட்ட பொறுப்பு மந்திரி பபன்ராவ் லோனிகர், பால்வளத்துறை மந்திரி அர்ஜூன் கோத்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், மந்திரி சந்திரசேகர் பவன்குலே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மாநிலத்தில் வேளாண்துறை வளர்ச்சிக்காக சூரிய மின்சக்தி திட்டத்தை சோதனை அடிப்படையில் மராட்டிய அரசு கையில் எடுக்கும். ஏற்கனவே, இத்திட்டம் அகமத்நகர் மாவட்டம் சங்கம்நேரியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆகையால், வேளாண்துறைக்கு மின்வினியோகம் செய்வதில் உள்ள சுமைகளை தனிப்பட்ட சூரிய மின்சக்தி திட்டம் போக்கும்.

அதோடு சூரிய மின்சக்தி மலிவானதும், விவசாயிகளுக்கு பண கஷ்டத்தில் இருந்து நிவாரணமும் அளிக்கும். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட பஞ்சாயத்து பள்ளிக்கூடங்களுக்கும் சூரிய மின்சக்தி வழங்கப்படும். நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மின்திருட்டை தடுக்க போதுமான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.


Next Story