விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை
விருத்தாசலத்தில் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி கலாவதி(58). விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்த வந்த இவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் கலாவதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச்சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து தகவல் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவதி விழுப்புரத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு விருத்தாசலம் வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை காணவில்லை.
கலாவதி குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றதை அறிந்து யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து அவர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கலாவதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விருத்தாசலத்தில் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வர் வீட்டில் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.