பா.ஜனதா கூட்டணியில் இருந்து சுவாபிமானி சேத்காரி சங்கதானா விலகல்?


பா.ஜனதா கூட்டணியில் இருந்து சுவாபிமானி சேத்காரி சங்கதானா விலகல்?
x
தினத்தந்தி 14 Aug 2017 3:42 AM IST (Updated: 14 Aug 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கூட்டணியில் இருந்து சுவாபிமானி சேத்காரி சங்கதானா கட்சி விலகுமா? என்ற கேள்விக்கு அக்கட்சி தலைவர் ராஜூ ஷெட்டி பதில் அளித்தார்.

நாக்பூர்,

மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் கடந்த ஜூன் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுவாபிமானி சேத்காரி சங்கதானா கட்சி தலைவரும், விவசாய துறை மந்திரியுமான சதபாவு கோட், கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அவர் சமீபத்தில் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மந்திரி சதபாவு கோட் பா.ஜனதாவில் இணையலாம் என்று தகவல் வெளியானது. பரபரப்பான இந்த சூழலில், சுவாபிமானி சேத்காரி சங்கதானா நிறுவன தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி. நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, பா.ஜனதா கூட்டணியில் சுவாபிமானி சேத்காரி சங்கதானா தொடர்ந்து நீடிக்குமா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு ராஜூ ஷெட்டி எம்.பி. பதில் அளித்து கூறியதாவது:–

மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவேன், விவசாயிகளின் நலன் கருதி சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை மோடி மறந்துவிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க கூட அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது. மோடியின் வாக்குறுதிகளால் விவசாயிகள் ஏமாந்துவிட்டனர். ஆகையால், பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னமும் 15 நாட்களில் முடிவு எடுப்போம்.

விவசாயிகளை திரட்டி டெல்லியில் டிசம்பர் 20–ந் தேதி சுவாபிமானி சேத்காரி சங்கதானா சார்பில் மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு ராஜூ ஷெட்டி எம்.பி. தெரிவித்தார்.


Next Story