நள்ளிரவு முதல் விடிய விடிய மழை மரங்கள் சாய்ந்து விழுந்தன
புதுவையில் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
புதுச்சேரி,
புதுவையில் கோடை காலத்துக்குப் பிறகும் வெயில் கொளுத்தி வந்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரமாக அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர்ந்து பகலில் வெயில் கொளுத்தி வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணியளவில் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தபடி இருந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. முதலில் கொட்டி தீர்த்த மழை தொடர்ந்து விடிய விடிய தூறியபடியே இருந்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளில்லும் மழைநீர் தேங்கி கிடந்தது. மழையுடன் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் கருவடிக்குப்பம் பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். முத்தியால்பேட்டை காந்திவீதியில் சாய்ந்து விழுந்த மரமும் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த மழை காரணமாக புதுவையில் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கின. சுமார் 2 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.