தொடர் விடுமுறை எதிரொலி: புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிந்தனர். இதனால் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிகின்றன.
புதுச்சேரி,
சுற்றுலா நகரமான புதுவைக்கு வார இறுதி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.
தற்போது சுதந்திர தினமான 15–ந்தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிந்து உள்ளனர். இதனால் இங்குள்ள நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதாவது, புதுவை மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகே மாநிலத்திற்குள் போலீசார் அனுமதித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கோவில்கள், பஸ், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடை போலீசாரும் கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறார்கள். தங்கும் விடுதிகளுக்கு சந்தேகத்திற்குரிய வகையில் யாரும் வந்தால் அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ தெரிவிக்க வேண்டும் என விடுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.