காவிரில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முழு அளவில் தண்ணீர் விநியோகம்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றுப்படுகையில் தண்ணீர் சேர்ந்து ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முழு அளவில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் சார்பில் திருச்சி முக்கொம்பில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.616 கோடி செல்வில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் 281 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாள் ஒன்றுக்கு 48 மில்லியன் லிட்டர் தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் கிராமப்பகுதிகளில் 2ஆயிரத்து 300 குடியிருப்புகளும், 4 நகரசபை, 7 பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் இந்த குடிநீர் முழுமையான தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் காவிரி ஆற்றுப்படுகையில் தண்ணீர் இன்றி ராமநாதபுரத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்வது குறைந்து போனது. இந்த தண்ணீர் மேலும் குறைந்து கடந்த 20 நாட்களாக நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த தண்ணீரும் மேல்நிலை தொட்டியில் ஏற்ற முடியாத அளவிற்கு அழுத்தம் இல்லாமல் இருந்ததால் மக்களுக்கு பயனில்லாமல் போனது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்று படுகையில் தண்ணீர் தேவைக்காக 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதன்படி திறந்துவிடப்பட்ட தண்ணீர் முத்தரசநல்லூரை வந்தடைந்ததோடு, அதனையும் தாண்டி சென்றுள்ளது.
இதன்காரணமாக ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யும் முத்தரசநல்லூர் கிணறுகளில் தண்ணீர் ஊற்று எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்திருந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் தேவையான 48 மில்லியன் லிட்டர் தண்ணீர் முழு அளவில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில் 13 மில்லியன் லிட்டர் தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு எடுத்துக்கொண்டதுபோக மீதம் உள்ள தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளது.
இதனால், இதுநாள் வரை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை மண்டல பகுதிகளுக்கு முறை வைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு நேற்று முதல் முழு அளவில் காவிரி கூட்டுக்குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் இதுபோன்று முழுமையான அளவில் தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்தரசநல்லூரில் சேர்ந்துள்ள தண்ணீர் மற்றும் அந்த பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நிலத்தடி நீர்ஆதாரம் அதிகரிக்கும் என்பதால் ராமநாதபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு தண்ணீர் முழு அளவில் விநியோகம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அக்டேர்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் இந்த பகுதியில் நீர்ஆதாரம் உயர்ந்துவிடும். இதுபோன்ற சூழ்நிலையால் மாவட்டத்தில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு அடியோடு நீங்கி காவிரிகூட்டுக்குடிநீர் முழுமையாக விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.