பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வீட்டு வேலைக்காரர், விஷம் குடித்து தற்கொலை
பெருந்துறை தோப்பு வெங்கடாசலம்ட எம்.எல்.ஏ. வீட்டு வேலைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வீட்டில் தோட்ட பராமரிப்பு, வீடு பராமரிப்பு, மாடு பராமரிப்பு ஆகிய வேலைகளை செய்து வந்தார்.
இவருடைய மனைவி பாப்பாத்தி (57). இவர்களுக்கு சந்திரன் (32), மாகாளி (30) என்ற 2 மகன்களும், லட்சுமி (28) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் ஆகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வெங்கமேட்டில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் குப்புசாமி கிடந்து உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்று நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து குப்புசாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகிறார். தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வீட்டு வேலைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.