தன்னலமற்ற சுதந்திர போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்


தன்னலமற்ற சுதந்திர போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2017 1:30 AM GMT (Updated: 2017-08-15T01:47:51+05:30)

தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வரலாறை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்று முதல்– அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள சுதந்திரதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

லட்சக்கணக்கான வீர மறவர்களின் தியாகமே அன்னிய தேசத்திடம் அடிமைப்பட்டு கிடந்த நம் இந்திய திருநாடு சுதந்திரம் மலர காரணமாக இருந்தது. தேசத்திற்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்தவர்களின் தேசப்பற்றினையும், தியாக உணர்வினையும் போற்றும் தினமாக இந்த திருநாளை கொண்டாட வேண்டும்.

ஒப்பற்ற தியாகத்தால் நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது நமது கடமை. எப்போதெல்லாம் நாட்டின் சுதந்திரத்திற்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறதோ? அப்போதெல்லாம் தேசப்பற்றோடு ஒன்றிணைந்து போராட வேண்டியது நமது கடமையாகும்.

சாதி, மதம், இனம், மொழி ஆகிய பேதங்களை கடந்து ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதன் அடையாளமே நாம் பெற்ற சுதந்திரம். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு குடிமகனும் ஏதாவது ஒரு சாதனையை செய்வதே தியாகிகளை மதிக்கும் செயலாகும். இந்திய திருநாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து நேர்ந்தால் ஒவ்வொரு இந்தியரும் தியாகிகள் ஆவார்கள் என்பதை உயர்த்தும் விதமாக நாம் செயல்பட வேண்டும் என்று இந்தநாளில் உறுதியேற்க வேண்டும்.

சுதந்திர நன்னாளில் இந்திய விடுதலையின் வரலாற்றினையும், அதற்காக பாடுபட்ட தலைவர்களின் தன்னலமற்ற தியாகத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து கூறுவது நம்முடைய இன்றியமையாத கடமை. அவ்வாறு எடுத்து கூறி நம் சுதந்திரத்தின் வரலாற்றை அவர்களுக்கு உணர்த்துவதோடு, பாரத நாட்டின் சுதந்திர ஜோதியை அணையாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவோம். புதுவை மாநில மக்களுக்கும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். எண்ணற்றத் தலைவர்களின் உழைப்பாலும், உயிர் தியாகத்தாலும் நாம் அடைந்த சுதந்திரத்தை போற்றி பேணிக்காப்பது ஒவ்வொரு இந்தியனின் தலையாய கடமையாகும். மகாத்மாகாந்தி, நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி போன்ற மாபெரும் தலைவர்களின் கடும் உழைப்பால் நமது தேசம் வேகமாக முன்னேற்றம் கண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நமது தேசத் தலைவர்களிடம் இருந்த எளிமை, பொறுமை, சகோதர மனப்பான்மை, தாய் நாட்டுப்பற்று, நமது தேசத்தை வல்லரசாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய அனைத்தும் மாணவர்கள், இளைஞர்கள் மனதில் கொண்டு செல்ல இந்த சுதந்திர நாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம். நமது புதுச்சேரி மாநில மக்கள் மதச்சார்பு என்னும் மாய வலைக்குள் சிக்குண்டு தவிக்காமல், வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு சகோதர மனப்பான்மையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story