மதுரை–விருதுநகர் இருவழி ரெயில்பாதை பணியை முதலில் தொடங்க வேண்டும்
மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்தபடி மதுரை–விருதுநகர் இடையே இருவழி ரெயில்பாதை திட்டப்பணியை முதல்கட்டமாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மத்திய அமைச்சரவை தென் மாவட்டங்களுக்கான ரெயில் பாதையை இருவழி பாதையாக்க 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வாஞ்சிமணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையில் 102 கிலோ மீட்டர் ரெயில் பாதையை ரூ.1,004 கோடி மதிப்பீட்டில் இருவழி பாதையாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இதே போன்று கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான 86.5 கிலோ மீட்டர் ரெயில் பாதையை ரூ.1,431 கோடி மதிப்பீட்டில் இருவழி பாதையாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மதுரையில் இருந்து வாஞ்சிமணியாச்சி வழியாக தூத்துக்குடி வரையிலான 160 கிலோ மீட்டர் ரெயில்பாதையை ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் இருவழியாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் அனைத்துமே 2021–ம் ஆண்டிற்குள் அதாவது 4 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் திட்டப்பணிக்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வதை பொறுத்தே திட்டப்பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படும். இதனால் இந்த திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைய தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது உள்ள நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதையில் விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் செங்கோட்டையில் இருந்து வரும் ரெயில்களும் வந்து செல்வதால் மதுரை–விருதுநகர் ரெயில் நிலையம் இடையே ரெயில் போக்குவரத்தில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதனால் பல சந்தர்ப்பங்களில் ரெயில்கள் விருதுநகர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
எனவே ரெயில்வே அமைச்சகம் முதல்கட்ட பணியாக விருதுநகர்–மதுரை இடையே உள்ள 44 கிலோ மீட்டர் ரெயில் பாதையை இருவழி பாதையாக மாற்றும் பணியினை முதலில் தொடங்கி விரைந்து முடித்தால் விருதுநகர் சந்திப்பில் இருந்து மதுரைக்கு செல்லும் ரெயில்கள் தாமதம் ஆவதை தவிர்க்க முடியும். எனவே இது குறித்து தென்னகரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே அமைச்சகத்துக்கு எடுத்துக்கூறி இத்திட்டப்பணியை முதலில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.