திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்
திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே மதுரை மாநகராட்சி 96–வது வார்டுக்கு உள்பட்ட ஒம்சக்தி நகர் அம்பேத்கர் தெருவில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் நடக்கவில்லை. காரணம் பழுதான குழாய், மின்மோட்டார்கள் சரி செய்யப்படாமலும், புதியதாக போடப்பட்ட ஆழ்துளை கிணறு செயல்படாமலும் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவு என்ஜீனீயர்களை, விடுதலைசிறுத்தைகள் கட்சி ஒவியர் அணி மாநில துணை செயலாளர் ஆதவன் தலைமையில் பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை என்றும், தொடர்ந்து பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டிற்கு சென்று சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தகவலறிந்த திருநகர் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்றுக்கொள்ளாத பெண்கள், மெயின் ரோட்டிற்கு செல்லாமல், வாகனங்கள் செல்லக்கூடிய அம்பேத்கர் மெயின் தெருவில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, உடனடியாக குடிநீர் வழங்கக் கோரினர். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், பழுதான குழாய் 2 நாளில் சரி செய்யப்படும்.
புதியதாக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு இந்த வாரத்தில் இயங்க உள்ளது. ஆகவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் 2 முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும். தற்போது வாகனம் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது என்றும் மறியலை கைவிடுமாறும் கூறினர். தொடர்ந்து நகராட்சி ஒப்பந்த டிராக்டரிலில் குடிநீர் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.