மதுரையை மையமாக வைத்து ராமேசுவரம், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் இயக்க நடவடிக்கை
மதுரையை மையமாக வைத்து ராமேசுவரம், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் இயக்க நடவடிக்கை மத்திய மந்திரி தகவல்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ்சர்மா நேற்று குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தார். அவரை கோவில் இணை கமிஷனர் நடராஜன் வரவேற்றார். அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமியை தரிசனம் செய்து, அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:–
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை தாஜ்மகாலை பார்த்து செல்பவர்களை விட அதிகமாக இருப்பது பெருமையாக இருக்கிறது. மேலும் இங்கு நடைபெறும் திருப்பணிகள் கோவிலின் ஆன்மிகத்தன்மை, கட்டிடக்கலையை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனாட்சி அம்மன் கோவிலில் பழைய கல்தூண்களை மாற்றி புதிய தூண்கள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது பற்றி மாநில அரசுடன், மத்திய அரசு விவாதித்து நடவடிக்கை எடுக்கும். மதுரையை மையமாக வைத்து ராமேசுவரம், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தமிழனின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது. கீழடியில் தொடர்ந்து ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்கு ஆய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை வைத்து கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.