பள்ளி வகுப்பறையில் தவறி விழுந்த மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு போலீசார் விசாரணை


பள்ளி வகுப்பறையில் தவறி விழுந்த மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 15 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அரசு பள்ளி வகுப்பறையில் தவறி விழுந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி,

முசிறியில் உள்ள திருமுருகநகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, இவர், நாமக்கல் மாவட்டம் மருதம்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சாய்பிரசாத்(வயது14). இவர், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருந்தார். புவனேஸ்வரியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டதால் தாயும், மகனும் முசிறியில் உள்ள மாமியார் அலமேலு(84) வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சாய்பிரசாத், கடந்த 9-ந் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக வகுப்பறையில் இருந்து வெளியே வந்தபோது கால்தவறி கீழே விழுந்தார். இதில் நெற்றிப்பொட்டில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் சாய்பிரசாத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கிருந்தது மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சாய்பிரசாத் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து முசிறி போலீசில் புவனேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா, சாய்பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தார்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புவனேஸ்வரிக்கு சாய்பிரசாத் ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story