பழுதடைந்துள்ள 2 மதகுகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கு கலெக்டர் உத்தரவு


பழுதடைந்துள்ள 2 மதகுகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

பாப்பக்காப்பட்டி பெரிய ஏரியில் பழுதடைந்துள்ள 2 மதகுகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தோகைமலை,

பஞ்சப்பட்டி அருகே உள்ள பாப்பக்காப்பட்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 190 ஏக்கர் பரப்பளவில் பாப்பக்காப்பட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் சேகரிக்கப்படும் தண்ணீர் 2 மதகுகள் மூலம் மலையாண்டிபட்டி, பாப்பக்காப்பட்டி, பாப்பக்காப்பட்டி காலனி பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இந்நிலையில் பாப்பக்காப்பட்டி ஏரியின் கரையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் 2 மதகுகள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாப்பக்காப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதியில் அதிகமான மழை பெய்தது. இதனால் பாப்பக்காப்பட்டி ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து வாரியின் மூலம் ஏரியின் கொள்ளளவில் 4-ல் ஒரு பங்கு அளவு(கால் பங்கு) ஏரிக்கு தண்ணீர் வந்தது.

விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் ஏற்கனவே பழுதடைந்து இருந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வந்தது. இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கற்களையும், மண் மூட்டைகளையும் கொண்டு தண்ணீர் வெளியேறி வந்த மதகுகளை அடைத்தனர். தொடர்ந்து பாப்பக்காப்பட்டி ஏரியின் மதகுகளை சரிசெய்து தண்ணீரை சேமிக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நேற்று பாப்பக்காப்பட்டி பெரிய ஏரிக்கு வந்து மதகுகளை பார்வையிட்டார்.

பின்னர் ஏரியில் உள்ள 2 மதகுகளையும் பொதுப் பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து மதகுகளில் உள்ள பழுதுகளை சரிசெய்ய கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவிட்டார். பின்னர் மழை காலங்களில் ஏரியில் அதிக தண்ணீரை தேக்கி பயன்படுத்தி கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முன்னதாக பெரியமலையாண்டிப்பட்டியில் உள்ள ஆரம்பப்பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க ஒன்றிய ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் முரளிதரன், மண்டல தாசில்தார் மைதிலி, ஒன்றிய ஆணையர்கள் புவனேஷ்வரி, கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story