தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு


தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் வடக்குமாதவி சாலை, 4-வது வார்டு ராயல் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் அக்பர்பாஷா (வயது 58). தள்ளு வண்டிகள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். அக்பர்பாஷா, அவரது உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். அக்பர்பாஷாவின் மகன் இப்ராகீம் மட்டும் வீட்டில் இருந்தார். இதனிடையே இப்ராகீம் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு பாலக்கரை பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இப்ராகீம், இது குறித்து தனது பெற்றோருக்கும், பெரம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் ஆகியவற்றுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து அக்பர் பாஷா நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை போன வீட்டருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்ம நபர் களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளனவா? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Tags :
Next Story