புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்


புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 15 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

காரைபாக்கத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள காரைபாக்கம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந்தேதி திருமானூர் பங்கு தந்தை பெல்லார்மின் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-ந்தேதி மாலை கிராமத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ குடும்பங்களின் சார்பில் விழா நவநாள் திருப்பலி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித வனத்து சின்னப்பர் கல்லறை புனிதப் படுத்துதல் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ஏசுசபை குழுமம் அருள் தலைமையில், திருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து புனித அந்தோணியார், புனித சகாயமாதா ஆகிய தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. திருமானூர் பங்கு தந்தை பெல்லார்மின் தேரை புனிதப்படுத்தினார். அதைத்தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தேரை திரளான கிறிஸ்தவர்கள் இழுத்து சென்றனர். அப்போது வீடுகள் தோறும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் தேரில் எழுந்தருளியிருந்த புனித சகாயமாதா மற்றும் புனித அந்தோணியாரின் அருளை பெற்றனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story