மூணாறில் சாலையில் உலா வந்த காட்டுயானை போக்குவரத்து பாதிப்பு


மூணாறில் சாலையில் உலா வந்த காட்டுயானை போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 15 Aug 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

மூணாறில், சாலையில் உலா வந்த காட்டுயானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூணாறு,

மூணாறு– உடுமலை ரோட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த அலுவலகம் அருகே சாலையில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. சாலையோரத்தில் உள்ள மூங்கில்களை தின்று கொண்டிருந்தது. பின்னர், காட்டுயானை சாலையில் அங்கும், இங்குமாக ஆக்ரோ‌ஷமாக உலா வந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை காட்டுயானை விரட்டியது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் சிலர் யானையுடன் ‘செல்பி’ எடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூணாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டுயானையை புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகளை அங்கிருந்து விரட்டினர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் தீப்பந்தங்களை கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story