மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிதம்பரத்தில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிதம்பரத்தில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புவனகிரி,
சிதம்பரத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால.அறவாழி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன், குமராட்சி ஒன்றிய காங்கிரஸ் செயலாளர் புவனேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொள்ளிடம் வெள்ளாற்றில் தடுப்பனை கட்ட வேண்டும், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சிதம்பரம் காந்திசிலை முன்பு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கம் ரவீந்திரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடேசன், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன் நன்றி கூறினார்.