கும்மிடிப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது சரிந்த லாரி; மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


கும்மிடிப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது சரிந்த லாரி; மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2017 4:45 AM IST (Updated: 15 Aug 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது லாரி சரிந்தது. டிரைவரை எச்சரிக்கை செய்ய லாரியின் பின்புறம் கையால் தட்டிய மற்றொரு லாரி கிளீனர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. நேற்று இந்த தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து பழைய இரும்பு பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு டிரைவர் சாம்சன்(வயது 51) என்பவர் வந்தார்.

தொழிற்சாலையின் முகப்பு பகுதியையொட்டிய சாலை அருகே உயர் மின்அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. டிரைவர் சாம்சன், லாரியை சாலையோரம் அணைத்து நிறுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டு பகுதியானது அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது சரிந்தது.

இதை அறிந்த டிரைவர் சாம்சன், லாரியை அப்படியே நிறுத்தி விட்டு உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் இதனை கவனிக்காமல் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் கிளீனரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சயநாயக்கன்பட்டி கிராமத்தைச்சேர்ந்த சுப்புராஜ்(35) என்பவர் லாரி டிரான்ஸ்பார்மர் மீது சரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

டிரான்ஸ்பார்மர் மீது இரும்பு லோடு லாரி உரசினால் விபரீதம் ஏற்படுமே என்று பதறிய அவர், விபத்தை தவிர்க்க அந்த லாரியின் டிரைவரை உஷார்படுத்தும் வகையில் லாரியின் பின்பக்கம் தனது கையை வைத்து தட்டியவாறு எச்சரிக்கை செய்தார்.

அப்போது டிரான்ஸ்பார்மர் மீது இரும்பு லோடுடன் இருந்த லாரி உரசியதால் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து அதன் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. லாரியின் பின்பக்கம் தனது கைகளை வைத்து தட்டி டிரைவரை எச்சரிக்கை செய்ய முயன்ற சுப்புராஜ், மின்சாரம் தாக்கி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான சுப்புராஜீன் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சப்–இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story