பெரியபாளையம் அருகே மர்ம காய்ச்சலால் தொழிலாளி சாவு
பெரியபாளையம் அருகே மர்ம காய்ச்சலால் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுடைய மகன் சுமன்(வயது 17). கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த ஒருமாத காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுமன், பெரியபாளையத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகரித்ததால் அவரை திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்து இறந்ததாகவும் தெரிகிறது.
கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஜெய்கணேஷ் என்பவருடைய 3 வயது மகன், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.
இந்தநிலையில், மர்ம காய்ச்சலால் தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் பகுதியில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.