கோத்தகிரியில் நீதிமன்றம் கட்டும் இடத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு


கோத்தகிரியில் நீதிமன்றம் கட்டும் இடத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 15 Aug 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நீதிமன்றம் கட்டுப்பட இருக்கும் இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார். அப்போது அவர் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைவில் முடிக்குமாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தினார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தரைதளத்தில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி தாலுகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்க்ள வசித்து வருகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி 1992–ல் குற்றவியல் நீதிமன்றமும், இதைத்தொடர்ந்து 1995–ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் தொடங்கப்பட்டு இந்த கட்டிடத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

நீதிமன்றத்திற்கு என தனியாக கட்டிடம் இல்லாத நிலையில் தாலுகா அலுவலகத்தில் போதுமான இடவசதி இல்லாமல் நீதிமன்றம் இதுவரை இயங்கி வருகிறது. மேலும் நீதிபதி மற்றும் நீதிமன்ற அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லை. நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட அறை சிறியதாக உள்ளதால் வக்கீல்கள், அரசு அலுவலர்கள் மற்றும் வழக்கு சம்மந்தமாக வரும் பொதுமக்கள் அங்கே அமர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள தனி அறை மற்றும் கழிப்பிட வசதி, நீதிமன்றத்துக்கு என நூலகம் ஆகிய வசதிகள் கூட இல்லை. இதுதவிர வக்கீல்கள் அமர சிறிய அறையில் வக்கீல் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய நீதிமன்றம் கட்ட வேண்டும் என வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அரசு மருத்துவமனை சாலைக்கு அருகில் 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு புவியியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த இடம் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்றதாக இல்லை என அறிக்கை அளித்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வருவாய் துறைக்கு சொந்தமாக கோத்தகிரி சக்தி மலையில் உள்ள இடம் புதிய நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார் கோத்தகிரி கோர்ட்டில் 2017–ம் ஆண்டிற்கான ஆய்வுப்பணியை மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பழைய வழக்குகளை விரைவில் முடிக்குமாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து சக்திமலை பகுதியில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டால் கிளை சிறை கட்டுவதற்கும் கூடுதலாக விரிவாக்க பணிகளுக்கு இடம் உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட நீதிபதி வடமலை, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், கோத்தகிரி மாஜிஸ்திரேட் ஸ்ரீதர், மாவட்ட ஆயத்தீர்வை உதவி கலெக்டர் முருகன், வழக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கோத்தகிரி தாசில்தார் மகேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் அணிவகுப்பு மரியாதையை நீதிபதி கிருஷ்ணகுமார் ஏற்றுக்கொண்டார்.


Next Story