‘இறந்த பிறகும் வாழ உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்’ நடிகர் சிவகுமார் பேச்சு


‘இறந்த பிறகும் வாழ உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்’ நடிகர் சிவகுமார் பேச்சு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:45 AM IST (Updated: 15 Aug 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

‘இறந்த பிறகும் வாழ உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்‘ என்று கோவையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசினார்.

கோவை,

இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இளம் இந்தியா ஆகிய அமைப்பு சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மணி பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதற்கு கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொழில் கூட்டமைப்பு தலைவர் நாராயணன், உடல் உறுப்பு தான அமைப்பின் திட்ட தலைவர் டாக்டர் ரமணி, டாக்டர் பிரவீன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அளவுக்கு மீறி உள்ள சொத்துக்களை ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த சொத்தே உன்னை அழித்துவிடும் என்று ஆதித்தமிழன் முன்பே கூறினான். இந்திய தலைவர்களில் காந்தி, காமராஜர் ஆகியோருக்கு இணையான தலைவர்கள் வேறு யாரும் இல்லை. காந்தி இந்திய விடுதலைக்காகவும், தீண்டாமையை ஒழிப்பதற்காகவும் மிக கடுமையாக பாடுபட்டார். காமராஜர் தமிழகத்தில் அணைகளை கட்டினார், தொழிற்சாலைகளை தொடங்கி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தினார். ஏழை மாணவ–மாணவிகள் படிக்க பள்ளிகளையும், அவர்கள் மதியம் சாப்பிட உணவும் வழங்கினார்.

உடுமலை பேட்டையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அவரது பெற்றோர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த 3–வது நாளில் ஏற்பட்ட விபத்தில் அந்த மாணவர் இறந்து விட்டார். அவரது உடல் உறுப்புகளை அந்த மாணவரின் பெற்றோர் தானமாக வழங்கினர். மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாகும் இந்த உடல் உறுப்புகளை அனைவரும் தானம் செய்ய முன்வர வேண்டும்.

இங்கு மாநகராட்சி தனி அதிகாரி பேசும் போது, போன் செய்தால் உடல் உறுப்புகள் கிடைக்கும் அளவிற்கு உடல் உறுப்பு தானம் நடைபெற வேண்டும் என்று சொன்னார். எனவே இறந்த பிறகும் வாழ உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் சிவகுமார், தனிஅதிகாரி விஜயகார்த்திகேயன் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக பிரசன்ன கிருஷ்ணா வரவேற்றார். முடிவில் டாக்டர் ஐஸ்வர்யா அர்ஜூன் நன்றி கூறினார்.


Next Story