கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
பெங்களூரு,
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
அனைத்து கட்சி கூட்டம்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததும், தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாகவும், சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கு குறித்து விவாதிக்கவும் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த...
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ரேவண்ணா, நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி. பட்டீல், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்தும், அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன் படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது, விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்தும் அனைத்துகட்சி கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தார்கள். பின்னர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை குடி நீருக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அனைத்துகட்சி கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
43 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 46 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் குறைவான அளவு மழை பெய்துள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவு நீரே உள்ளது. அதாவது 4 அணைகளிலும் 114 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது 4 அணைகளிலும் சேர்த்து 43 டி.எம்.சி. தண்ணீர் தான் இருக்கிறது.
ஏற்கனவே கடந்த 9-ந் தேதி மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். அப்போது இந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட முடியாது என்றும், ஏரி, குளங்களை நிரப்ப மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறி இருந்தேன். நெல், கரும்பு போன்ற பயிர்களை பயிரிட வேண்டாம் என்றும் விவசாயிகளிடம் கூறியுள்ளேன்.
விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்
எனவே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள 4 அணைகளில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் குடிநீருக்கு மட்டுமே 30 டி.எம்.சி. தண்ணீர் தேவை. அணைகளில் உள்ள தண்ணீரை அடுத்த ஆண்டு (2018) ஜூன் வரை குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
விவசாயத்திற்கு கூட தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதனை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story