முதல்-மந்திரி பட்னாவிஸ் தேசிய கொடி ஏற்றுகிறார் 48 ஆயிரம் போலீசார் குவிப்பு
மராட்டிய அரசு சார்பில் மந்திராலயாவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
மும்பை,
நாட்டின் 71-வது சுதந்திர தினவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மராட்டிய மாநில அரசு சார்பில் அரசின் தலைமை செயலகமான நரிமன்பாயிண்டில் உள்ள மந்திராலயாவில் சுதந்திர தினவிழா நடக்கிறது.
இதில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு காலை 7.30 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையில் அவர் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். விழாவில் மாநில மந்திரிகள், அரசுத்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
பலத்த பாதுகாப்பு
மும்பையில் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 48 ஆயிரம் மும்பை நகர போலீசார், அதிவிரைவு படையினர் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு படையினர், மாநில ரிசர்வ் படையினர் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தென்மும்பையில் விமானங்கள், இலகு ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் பறக்க தடை
அந்தேரி சாகர் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம், சாந்தாகுருசில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கெடுபிடிகள் செய்யப்பட்டு உள்ளன.
பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலம், மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான இடங்கள், சுற்றுலா பயணிகள் குவியும் இடங்கள், பொதுமக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story