ராணுவ வீரருக்கு சிலை வைத்து மரியாதை


ராணுவ வீரருக்கு சிலை வைத்து மரியாதை
x
தினத்தந்தி 15 Aug 2017 11:51 AM IST (Updated: 15 Aug 2017 11:51 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பி.திப்பனப்பள்ளி, தானம்பட்டி, சிப்பாயூர், குட்டூர், சாமந்தமலை, பச்சிகானப்பள்ளி, சூளகிரி, தேவசமுத்திரம்,

மஜீத்கொல்லஅள்ளி உட்பட பல கிராமங்களில் இருந்து இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் திப்பனப்பள்ளி கிராமம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கிருஷ்ணகிரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பி.திப்பனப்பள்ளி கிராமத்திற்குள் நுழையும் போதே அங்கு ராணுவ வீரரின் சிலை மிடுக்காக காட்சி அளிக்கிறது. இந்த கிராமத்தில் மக்களின் பிரதான தொழில் விவசாயமாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

250-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தில் சிப்பாய் முதல் அதிகாரி வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் முப்படையில் பணியாற்றி ஓய்வும் பெற்றிருக்கிறார்கள். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்:

“எங்கள் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். 1914-19-ம் ஆண்டு நடந்த முதல் உலக போரின் போது எங்கள் கிராமத்தை சேர்ந்த முனிசாமி என்பவர் இறந்துவிட்டார். அவர் உடல் வரவில்லை. இதே போல் இரண்டாம் உலக போர் 1939-45-ம் ஆண்டுகளில் நடந்த போது எங்கள் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன், குப்புசாமி, பெருமாள், முனிசாமி ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றினர். ஆனால் அவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை.

இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி கோவிந்தசாமி என்பவர் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மட்டும் எங்கள் கிராமத்திற்கு வந்தது. இவ்வாறு எங்கள் கிராமத்தை சேர்ந்த 6 பேர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களது பெயரை கல்வெட்டாக எழுதி வைத்துள்ளோம். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி எங்கள் கிராமத்தில் “ஜெய் ஜவான்” சிலையை அமைத்தோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதியும், ஆகஸ்டு 15-ந் தேதியும் ஜெய் ஜவான் சிலை முன்பு எங்கள் சங்க கொடியை ஏற்றி, வீரவணக்கம் செலுத்தி வருகிறோம்” என்கிறார்கள்.

Next Story