புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு விழா தேர் பவனி திரளானவர்கள் கலந்து கொண்டனர்


புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு விழா தேர் பவனி திரளானவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:00 AM IST (Updated: 16 Aug 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் 334-வது விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 7-ம் திருநாள் மதியம் மரியன்னை மாநாடு நடந்தது. 8-ம் திருநாள் காலையில் புதுநன்மை விழா நடந்தது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி, மாலை ஆராதனை நடந்தது.

தேர் பவனி

10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் தேரடி திருப்பலி நடந்தது. தொடர்ந்து தேர் பவனி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தேரின் முன்பாக வழிநெடுகிலும் கும்பிடுசேவை செய்து, மாதாவை வழிபட்டனர்.

பின்னர் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் திருவிழா திருப்பலி நடந்து. மாலையில் திருப்பலி, நற்கருணை பவனி நடந்தது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அருள்ராஜ், உதவி பங்குதந்தை அலெக்சாண்டர் தலைமையில் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பங்கு மக்கள் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story