பேரணாம்பட்டில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது 3 இடங்களில் சாலை மறியல்


பேரணாம்பட்டில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது 3 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் 3 இடங்களில் சாலை மறியல் நடந்தது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று மதியம் 2 மணி நேரம் இடைவிடாது பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளான தரைக்காடு, ஈத்கா ரோடு, அரவட்லா ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கால்வாய் தூர் எடுக்கப்படாததால் மழை நீர் அங்குள்ள குடிசை வீடுகளில் புகுந்தது.

மேல்ஷாப் லைனில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தரைக்காடு, குப்பைமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீ.கோட்டா சாலையில் கொட்டும் மழையில் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பஹமதாபாத் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நான்குகம்பம் பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் பத்மநாபன், பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்கு உடனடியாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல்ஷாப் லைனை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :
Next Story