சுதந்திர தினத்தையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம்


சுதந்திர தினத்தையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

தா.பழூர்,

சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அரியலூர் ஒன்றியம், பொட்டவெளி ஊராட்சியில் சுதந்திர தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களோடு கலந்துரையாடினார்.

தா.பழூர்

தா.பழூர் ஒன்றியம் பொற்பதிந்தநல்லூர் கிராம ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், ஜாகிர்உசேன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், குடிநீர் பற்றாக்குறை, டெங்கு காய்ச்சல், சுகாதாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேபோல் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் நடை பெற்ற கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், ஜாகிர்உசேன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வேப்பூர்

வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் அகரம்சீகூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சுமதி செல்வம் தலைமை தாங்கினார். வேப்பூர் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சட்டநாதன் பேசினார். கூட்டத்தில் அகரம்சீகூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும், குடிநீர் பிரச்சினை, டெங்கு விழிப்புணர்வு, கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை கட்டுவதன் அவசியம் குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கல்வி அறிவு பெறும் பெண்களின் சதவிகிதத்தை அதிகரித்தல், மகளிர் பாதுகாப்பு, கிராம வளர்ச்சி தொடர்பான குழுக்கள் அமைத்தல், குழந்தை திருமணத்தை தடுக்க கண்காணிப்பு குழு அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதே போல் திருமாந்துறை, சு.ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், வயலப்பாடி, வடக்கலூர் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

Next Story