காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 11:15 PM GMT (Updated: 2017-08-16T02:57:39+05:30)

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 6,700 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.

இதனால் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரே நாளில் அதிகரித்ததால் பரிசல்கள் இயக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால் பரிசல்கள் ஆற்றங்கரையோர பகுதிகளில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் அருவிகள் அமைந்துள்ள இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். எண்ணெய் மசாஜ் செய்யும் இடங்களில் அதிக கூட்டம் காணப் பட்டது. மசாஜ் செய்து கொண்டவர்கள் மெயின் அருவியில் செந்நிறத்தில் கொட்டிய நீரில் குளித்து மகிழ்ந்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்தனர். 

Related Tags :
Next Story