முன்னுரிமை இல்லாத ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தமா? கிராம சபை கூட்டத்தில அதிகாரிகள் விளக்கம்


முன்னுரிமை இல்லாத ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தமா? கிராம சபை கூட்டத்தில அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:00 AM IST (Updated: 16 Aug 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னுரிமை இல்லாத ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தப்படுகிறதா? என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்டதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரை, நெடுகுளா, குஞ்சப்பனை, நடுஹட்டி, அரக்கோடு, தேனாடு, கடினமாலா, கெங்கரை, கோடநாடு, கொணவக்கரை தொங்குமரஹடா உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஜக்கனாரை ஊராட்சி கிராம சபை கூட்டம் அரவேனு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் ரவிச்சந்திரன், கல்லாடா கிராம பிரதிநிதி ராமசந்திரன், ஜக்கனாரை மேல்ஹட்டி பிரதிநிதி ராமன், அரவேனு பிரதிநிதி ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய இந்தியாவை உருவாக்குவது என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்தில், முன்னுரிமை அல்லாத ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் மற்றும் அரசின் சலுகைகள் நிறுத்தப்பட இருப்பதாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டனர். மேலும், தற்போது வழங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் முன்னுரிமை உள்ளதா? (பி.எச்.எச்.) அல்லது முன்னுரிமை இல்லாததா? (என்.பி.எச்.எச்.) என எப்படி தெரிந்து கொள்வது என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், ரே‌ஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு நிறுத்தி வைப்பது சம்பந்தமான அறிவிப்போ அல்லது பயனாளிகள் அட்டவணையோ அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. பொதுமக்கள் தங்கள் கார்டுகள் எந்த வகையை சேர்ந்தது என ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் கீழ் பகுதியிலேயே அச்சிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். மேலும், ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு இன்னும் கிடைக்காதவர்கள் வட்ட வழங்கல் துறையினரிடம் கேட்டு தெரிவித்து கொள்ளலாம் என்றனர்.

மேலும் குடிநீர், தெருவிளக்கு, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல்வேறு கிராம மக்கள் அதிகாரியிடம் மனுக்கள் அளித்தனர். குரங்குகள், காட்டுப்பன்றிகள் தொல்லை, கரடிகள் நடமாட்டம் குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு வனக்காப்பாளர் முருகன், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கிராம சபை கூட்டத்தில் வருவாய் துறை, மின்வாரிய துறை, ரே‌ஷன் கடை ஊழியர்கள், சுகாதார இயக்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கொலக்கம்பை மேலூர் கிராம ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு குன்னூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் தேவராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சத்தியா, கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தூதூர்மட்டம், கொலக்கம்பை, முசாபுரி, தைமலை, காசோலை, மஞ்சக்கம்பை, டிக்லாண்ட் லீஸ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை வசதி, தெருவிளக்கு, நடைபாதை, உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனுக்களை வழங்கினார்கள். மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

கூட்டத்தில் தனி நபர் இல்ல கழிப்பறை, திடக்கழிவு மேலாண்மை திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முடிவில் ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story