மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தரைப்பாலத்தின் அடியில் பெண் பிணம் வீச்சு


மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தரைப்பாலத்தின் அடியில் பெண் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 15 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-16T03:43:53+05:30)

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தரைப்பாலத்தின் அருகே பள்ளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்தது. அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நாரவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு தரைப்பாலம் உள்ளது. அந்த பாலத்தின் அருகே நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. அதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மரக்காணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது தரைப்பாலத்தின் அடியில் நீலநிற பாலித்தீன் பையில் சுற்றி கயிறால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

அந்த பெண்ணின் உடல் பாலித்தீன் பையில் சுற்றி கயிறால் கட்டப்பட்டு இருந்ததால் அந்த பெண்ணை யாராவது கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. எங்கோ வைத்து அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு உடலை பார்சல் செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story