தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு


தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி

தேனி,

தேனியில் அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வருகிற 29–ந்தேதி நடக்கிறது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு தேனி அருகே போடி விலக்கு பகுதியில் மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:–

10 ஆண்டுகளுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் தேனிக்கு வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள். தேனி மாவட்ட நிர்வாகிகள் யாரும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இல்லை. நிர்வாகிகள் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். மதுரை மேலூரில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்களை விட 2 மடங்கு எம்.எல்.ஏ.க்கள் தேனி கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதற்காக அ.தி.மு.க. அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story