சுதந்திர தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் தர்ணா
சுதந்திர தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் அருந்தமிழரசு, மாநில கொள்ளை பரப்பு துணை செயலாளர் தலித்ராயன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகளும், மரிக்குண்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலரும் நேற்று வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி வரும் போது, சுதந்திர தினத்திற்கு எதிராகவும், தலித் மக்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர்.
நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் சென்று தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஊரில் இருந்த காலி இடத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடிசை அமைத்து குடியிருந்தனர். தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் ஊரில் ஒரு தரப்பினர் இந்த குடிசைகளை சேதப்படுத்தி, அகற்றியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே வீசிவிட்டனர். மீண்டும் குடிசை அமைத்தால் தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுத்து, இந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இந்த போராட்டத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.