வீட்டுமனை வழங்கக்கோரி சுதந்திரதினநாளில் வீடுகளில் கருப்புகொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு அன்னை சத்யாநகரில் வீட்டுமனை வழங்கக்கோரி சுதந்திரனதினமான நேற்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புகொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு அன்னை சத்யாநகர் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர். மேலும், வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அன்னை சத்யாநகரில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
ஈரோடு அன்னை சத்யாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சிதிலமடைந்து கிடந்ததால் இடிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த எங்களையும் வெளியேற அறிவுறுத்தப்பட்டது. இதனால் அருகில் உள்ள வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்தோம். பெருமாள்மலை மாயபுரம் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
எனவே பட்டா வழங்கக்கோரி நாங்கள் சுதந்திர தினத்தன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அதற்கு போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்து தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் வீடுகளில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினார்கள்.
சுதந்திரதினத்தில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.