முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றினார் கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்


முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றினார் கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:23 PM GMT (Updated: 2017-08-16T04:53:25+05:30)

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 8.58 மணியளவில் விழா மேடைக்கு முதல்-மந்திரி சித்தராமையா வந்தார். பின்னர் 9 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானத்தில் பறந்தபடி தேசிய கொடிக்கு மலர்களை தூவியது.

அதைத்தொடர்ந்து, நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி சித்தராமையா திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டார். பின்னர் மீண்டும் மேடைக்கு வந்த அவர், மாநில மக்களுக்காக சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

அரசு வேலை வழங்க முடிவு

அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகள். அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டு சுதந்திரம் அடைய செய்ய உழைத்தவர்களின் சுயநலம் இல்லாத உயர்ந்த உயிர்தியாகத்தை அனைவரும் இன்று போற்றுவோம். தினமும் இரவில் வீட்டில் நாம் அமைதியாக தூங்கி காலையில் கண்விழிக்கிறோம். நாம் அமைதியான வாழ்க்கை வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் நாட்டு எல்லைகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தான்.

எனவே ராணுவ வீரர்களையும், நாட்டு பாதுகாப்பு பணிக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களையும் நாம் அனைவரும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும். போரிட்டு மரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், போரிட்டு மாற்றுதிறனாளியாகும் ராணுவ வீரருக்கும் அரசு வேலை வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.

மிகவும் ஆபத்தானது

நாட்டில் இன்று வகுப்புவாதம் மற்றும் மதவாத பிரச்சினைகள் தலைதூக்கி இருப்பதை பார்க்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தானதோடு, அனைத்து மக்களுக்கும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். இதை அரசியல் நோக்கத்துக்காக ஒவ்வொருவரின் மனதிலும் விதைகளாக விதைப்பது மதத்தின் புனிதத்தை பாழாக்கும் செயலாகும். இதுபோன்று பிரிவினை உண்டாக்கும் சக்திகளை அழிப்பதற்கு இன்றைய நாளில் நாம் உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை தரத்தை மேம்பட்ட மட்டத்தில் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்தில் வளர்ச்சி பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தூண்டியவர்களாக பசவண்ணர், மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்ட தேச தலைவர்கள் உள்ளனர்.

சகித்து கொள்ள முடியாது

பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட பன்முக சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் நமது நாட்டின் வலிமை. இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நம்முடைய மொழி, கலாசாரங்களை பாதுகாப்பதன் மூலம் தான் நாம் வளர்கிறோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையாகும்.

ஒவ்வொரு மாநிலமும் அலுவலக மொழியை கொண்டுள்ளது. அந்த மொழியை முதன்மையாக பயன்படுத்தி கொள்ள அரசியல் சாசனம் இடம் அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் இன்னொரு மொழியை கட்டாயமாக புகுத்துவது சரியானது அல்ல. அவ்வாறு செய்வது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு எதிரானதாகும். கர்நாடகத்தில் கன்னட மொழி தான் முதன்மையானது. இதற்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது. ஆனால், அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதன்பிறகு, போலீசார், கேரள மாநில போலீஸ், பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி சித்தராமையா ஏற்றுக் கொண்டார்.

கலை நிகழ்ச்சிகள்

அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2,700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் விடுதலை போராட்ட தியாகிகளின் போராட்டத்தை சித்தரித்து நடித்து காட்டினார்கள். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா விருது வழங்கி பாராட்டினார்.

முன்னதாக மானேக்‌ஷா மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சுதந்திரதின விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கருடா கமாண்டோ படை உள்பட 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். விழாவில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் சங்கர், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார், ராணுவ வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். 

Next Story